சென்னை: தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டுகால திருமண வாழ்வை பரஸ்பர சம்மதத்துடன் முடித்துக்கொள்வதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது 14 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை திங்கட்கிழமையுடன் (நவம்பர் 16) முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இருவரும் இனி தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிரிவு எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாயமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதற்கும் குழந்தையின் எதிர்கால மகிழ்ச்சி, நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் இருவரும் எப்போதும் முன்னுரிமை அளிப்போம். ஆதவ் மீது எனக்கு என்றென்றும் மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் அமைதியும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்,” என்று டெய்சி குறிப்பிட்டுள்ளார்.
டெய்சி மார்ட்டின் பிரபல லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டினின் மகள் ஆவார். இவரது தாயார் லீமா ரோஸ் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மணமுறிவு குறித்து அமைச்சர் ஆதவ் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரபூர்வக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
