நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்து அமைச்சர் ஆதவ் மறைமுக விமர்சனம்

நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்து அமைச்சர் ஆதவ் மறைமுக விமர்சனம்

கோப்புப் படம்: விகடன்

25 Oct 2026 - 3:52 pm

1 mins read

சென்னை: நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயனைக் குறிவைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக விமர்சித்திருப்பது தமிழக அரசியல், திரையுலக வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது.

நடிகர் விஜய் தனிக்கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளார். இதையடுத்து, திரைத்துறையைச் சேர்ந்த மேலும் சில முன்னணி நடிகர்களுக்கும் மனத்தில் அரசியல் ஆசை தளிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ரசிகர் மன்றச் சந்திப்புகளை அரசியல் பொதுக்கூட்டங்களின் பாணியில் நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில், சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளையரணிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ், நடிகர்களின் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.

“2029 மக்களவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதைத் தமிழகத்தில் இருந்து தீர்மானிக்க வேண்டும். அத்தகையச் சூழலை உருவாக்கத் திட்டமிடும் வேளையில், புதிய நடிகர்கள் டெல்லியில் முகாமிட்டு அதை உடைக்க முயல்கின்றனர்.

“பொங்கலுக்கு டெல்லி சென்றவர்கள் யார், டெல்லியில் முகாமிட்டுள்ளது யார் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,” என்று அமைச்சர் ஆதவ் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றதையும் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தை கட்சியாக மாற்றும் முயற்சியில் டெல்லி மேலிடத்தைச் சந்திக்க முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அத்தகைய தகவல்களைச் சுட்டிக்காட்டும் விதமாகவே அமைச்சர் அவ்வாறு பேசியதாகக் கருதப்படும் நிலையில், அவர் மீது தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்