மதுரை: கனிம வளத்துறை அதிகாரிகள் தங்களுக்கு சட்டவிரோதமாக வரும் வருவாயைப் பிரித்துக் கொள்வதற்காகவே மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி புகழேந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கனிம நிதி அறக்கட்டளையில் 2022ஆம் ஆண்டில் உதவி இயக்குநராக இருந்த மாரியம்மாள் என்பவர் மீது, அவரின் உதவியாளர் தினேஷ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “மாரியம்மாளிடம் உதவியாளராகப் பணிபுரியும்போது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தும் லஞ்சப் பணத்தை வாரத்திற்கு ஒருமுறை எடுத்து வந்து மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். அப்போது போலி நடைச்சீட்டு வழங்கியதாகப் புகார் எழுந்தது. அதற்கு நான்தான் காரணம் என மாரியம்மாள் கூறினார்.
“அறுபதுக்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் வங்கிக் கணக்கு மூலம் லஞ்சப்பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே எனக்கும், எனது தாயாருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட முறையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்தும் மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்,” என்றார்.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, “கனிமவள உதவி இயக்குநர் மாரியம்மாள், லஞ்ச வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்பு மூன்று மாதங்களில் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு குவாரி உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இப்போது, அவர் தேனி மாவட்டத்தில் பணியில் இருப்பதால் இந்த மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன,” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதற்காகத்தான்.
தொடர்புடைய செய்திகள்
“அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசின் வருவாயைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. மனுதாரர் வங்கிக் கணக்கில் குவாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினர்? இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்தனர்? என்று அம்பாத்துறை காவல் ஆய்வாளர் விரிவாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
“தவறும்பட்சத்தில் இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும்,” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.