சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கி உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய பயன்பாடற்ற வாகன டயர்கள், நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட 43 டன் எடையுள்ள பொருள்களை மாநகராட்சிப் பணியாளர்கள் சேகரித்து அகற்றினர்.
மழைக்காலம் என்பதால், காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்புக் கொசு ஒழிப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் ஏறக்குறைய 3,703 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபர் 1 முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 8,373 கிலோ பழைய டயர்கள், 35,056 கிலோ தேவையற்ற நெகிழிப் பொருள்கள் என மொத்தம் 43,429 கிலோ (43 டன்) கழிவுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் உள்ள வணிக வளாகங்கள், கட்டுமான இடங்கள், வீடுகளில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ரூ.37,05,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.11,44,100 வசூல் செய்யப்பட்டது.
