சென்னை: நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற நிபந்தனை விதிக்கத் தயாரா என முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
திங்கள்கிழமை (ஏப்ரல் 21) சட்டப்பேரவை விவாதத்தின்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை அனுமதித்ததால்தான் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே, திமுகதான் என்றார்.
இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது உண்மைதான் என்றும் அதை மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“நாங்கள் எந்தவிதமான மறுப்பும் கூறவில்லை. ஆனால், மத்தியில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயமாக சொன்னதைச் செய்திருப்போம். ஆனால், இப்போது அதிமுக பாஜக கூட்டணி அமைத்திருக்கிறதே, நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம் என்ற நிபந்தனையை விதித்து, அக்கூட்டணியில் தொடர அருகதை இருக்கிறதா?” என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெறாது என்று கூறிவிட்டு, இப்போது கூட்டணி வைத்திருப்பது ஏன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“2026 மட்டுமல்ல, 2031ஆம் ஆண்டுத் தேர்தலிலும்கூட பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுக கூறியது. இப்போது கூட்டணி வைத்திருக்கிறீர்களே, யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்,” என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.