சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க புதிய கைப்பேசிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய நடிகர் விஜய் முயற்சி எடுத்துள்ளார்.
பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறும் தவெக மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அந்தச் செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.
இதற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்தப் புதிய செயலி வழியே உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது.
புதிய செயலியில் வாக்காளர் பட்டியல் இடம்பெறும். அதை வைத்து ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் நேரில் சென்று உறுப்பினர் சேர்கையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட வேண்டும். வேறு இடத்திலிருந்து உறுப்பினர் சேர்க்கை நடத்த முயற்சித்தால் செயலி ஏற்றுக்கொள்ளாது.
செயலிக்கான செயல்முறைப் பயிற்சி மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து மதுரை 2வது மாநில மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழுக்கள் அமைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
விஜய்யின் தவெக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விஜய் பேச இருக்கிறார்.