தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் புதிய ஆணையம்

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் புதிய ஆணையம்

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட வெளிநாட்டு தொழில்முனைவோரை மாநிலத்தில் முதலீடு செய்ய ஊக்குவிப்பது ஆணையத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று
கோப்புப் படம்: தமிழ்நாடு அரசு

06 Nov 2026 - 3:41 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டு அனுமதிகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்யவும் புதிய ‘தொழில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையத்தை’ அமைத்துத் தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலத் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படும் இந்த உயர்மட்ட ஆணையத்தில் மொத்தம் 20 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

வணிகத் துறைச் செயலாளர் இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். தொழில், நகராட்சி நிர்வாகம், உள்துறை, நிதி, நில ஒதுக்கீடு, மின்சாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடையற்ற வணிக ஒப்பந்தங்களின் கீழ் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டு வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்முனைவோரை மாநிலத்தில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதும் இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த அரசாணை தற்போது அதிகாரபூர்வமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே அமைப்பின் கீழ் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவதால், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மையால் ஏற்படும் காலதாமதங்கள் தவிர்க்கப்படும்.

முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை நேரடியாக இந்த ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக, பெருமளவிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான அனைத்து அரசு அனுமதிகளையும் ஒரே தளத்தில் துரிதமாக வழங்குவதை ஆணையம் உறுதி செய்யும்.

வரும் 2036க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியல் மாநிலமாக உயர்த்தும் இலக்கை அடைய இந்த ஆணையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்