சென்னை: தமிழகத்தில் உள்ள தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களையும் கட்டடங்களையும் பாதுகாப்பதற்குப் புதிய ஆணையம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அவற்றின் பராமரிப்பிற்காக வரவுசெலவுத் திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பழங்காலச் சிலைகள், பாரம்பரியக் கட்டடங்கள், அரசர்கால ஆயுதங்கள், பாண்டங்கள் உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படும். கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ, பௌத்த ஆலயங்கள் உள்ளிட்டவை பற்றிய தகவலும் பதிவேடுகளில் இடம்பெறும் எனச் சொல்லப்படுகிறது.
இவை அனைத்தையும் தமிழ்நாடு வருவாய்த் துறையின்கீழ் பதிவுசெய்து, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை புதிதாக அமையும் ஆணையம் செய்யும்படி அமைக்கப்படவுள்ளது. இதற்காக, அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பணியில் இந்தியா முழுவதிலும் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாறு, தொல்லியல்துறைப் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கான சட்ட முன்வடிவுகளும் செயல்பாட்டு வரைவுகளும் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக வடமாநிலங்களில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த வரலாறு, தொல்லியல்துறை மூத்த பேராசிரியர்கள் வட்டாரம் தெரிவித்தது.
“பதிவுசெய்யப்படுபவை எங்கு உள்ளனவோ அங்கேயே இருக்கும். அவற்றை அரசு கையகப்படுத்தாது. ஆனால், அவற்றைப் பாதுகாத்து, பராமரிக்கும் பணிகளை ஆணையம் செய்யும். அவற்றுக்குச் சேதாரம், திருட்டு போன்ற சட்டவிரோதப் பாதிப்பு ஏற்பட்டால் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்,” என்றும் அவர்கள் கூறினர்.
இதுபோன்ற மாநில அளவிலான ஆணையம் மேற்கு வங்க மாநிலத்திலும், நகர அளவிலான ஆணையம் மும்பையிலும் செயல்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அந்த அடிப்படையில் தமிழகத்திலும் ஒரு புதிய ஆணையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆயினும், மேற்கு வங்க, மும்பை ஆணையங்களைவிடக் கூடுதலான சில அம்சங்கள் தமிழகத்தில் அமையும் ஆணையத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஆணையம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

