சென்னை: நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனுக்குடன் கணக்கிட்டுச் சொல்லும் புதிய கருவியை சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தக் கருவிக்கு உலக அளவிலான காப்புரிமை முறைப்படி பெறப்பட்டுள்ளது.
கைக்கடிகாரம் வடிவில் இந்தப் புதிய கருவியை நோயாளியின் கை அல்லது வயிற்றுப் பகுதியில் பொருத்திக்கொள்ளலாம்.
அக்கருவியின் ‘சென்சாரி’ல் உள்ள ஒரு மில்லிமீட்டர் நீளத்திலான ஊசி, ரத்த நாளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் நாள்தோறும் ஒருவர் தனது ரத்தத்தில் உள்ள ‘குளுக்கோஸ்’ அளவை அறிந்துகொள்ள முடியும். இந்த அளவு தொடர்பான குறிப்புகள் நமது கைப்பேசி மூலம் தெரியவரும் என்று ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இதேபோன்ற கருவியை நான்கு வாரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகே புதிய கருவி வாங்க வேண்டும். அதற்கு செலவாகும். ஆனால், ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் கைக்கடிகார வடிவிலான புதிய கருவியில் ஊசியை மட்டும் மாற்றினால் போதும்.
“கை விரல்களில் ஊசியால் லேசாகக் குத்துவதால் வெளிவரும் ரத்தத்தில் உள்ள ‘குளுக்கோஸ்’ அளவை அறியும் தற்போதைய நடைமுறையில் நோயாளிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று ஐஐடி உலோகவியல், பொறியியல் துறையின் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் கூறுகிறார்.
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வின்போது, நூறு பேரில் 9 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நாள்தோறும் செய்யப்படும் பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

