சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின்மூலம் பண்டையத் தமிழர்களின் மரபணுத் தொடர்புகள், வாழ்வியல் முறைகள் குறித்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பண்டைய மரபணு ஆய்வகத்தில், தொல்பொருள் தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 75,000-க்கும் மேற்பட்ட சிதைந்த மரபணுத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அதில், பண்டைய மக்கள் தென்னிந்தியர்கள், இலங்கைத் தமிழர்கள், தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருந்தது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகலை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபியல் ஆய்வுகள் இக்கூற்றை உறுதி செய்வதாக உள்ளது என மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. குமரேசன் தெரிவித்துள்ளார்.
கீழடிச் சுடுகாடான கொந்தகையிலிருந்து 75,000 தரவுகளும் ஆதிச்சநல்லூர், சிவகலையிலிருந்து முறையே 9,000, 6,000 தரவுகளும் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு சுற்று ஆய்வுகள் நிறைவடைந்ததும் இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்துலக அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“காலக்கணிப்பின்படி, கீழடித் தளம் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிகிறது. அதேவேளையில், சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் கி.மு. 3345ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இது, மனித நாகரிக வரலாற்றில் இரும்பு உருக்கப்பட்ட மிகப் பழைமையான காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது,” என்று திரு குமரேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொந்தகையில் கி.மு. 600, சிவகளையில் கி.மு. 3300, ஆதிச்சநல்லுாரில் கி.மு. 1000 ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் மரபணு அமைப்பும் தற்போதைய தமிழக மக்கள், தென்கிழக்கு ஆசிய மக்கள், இலங்கை மக்களின் மரபணு அமைப்பும் பல்வேறு தொடர்புகள் கொண்டுள்ளதாக திரு குமரேசன் கூறியுள்ளார்.
இறைச்சி உணவு
பண்டையத் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நுட்பமான விவசாயம், சமையல் மரபுகளைப் பின்பற்றியுள்ளனர்.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள கொழுப்புப் படிவுகள், அவர்கள் இறைச்சியை உணவாகக் கொண்டதை உறுதிப்படுத்துகின்றன.
மேலும், ஆதிச்சநல்லூர், சிவகலை அரிசி மாதிரிகள், கொடுமணல் தினை மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள் மூலம் பண்டைய மக்களின் உணவுமுறை குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
தாழிகளில் ‘கொலஸ்ட்ரால்’ அதிகளவு படிந்துள்ளது. எனவே கீழடியில் வாழ்ந்த மக்கள் இறைச்சியை அதிகம் பயன்படுத்தி இருக்கக்கூடும்.
அவர்கள் அரிசி, பல்வேறு தினை வகைகள், நெய், பால், நிலக்கடலை, தேங்காய், கீரை, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை உள்ளடக்கிய சத்தான உணவுமுறையைப் பின்பற்றியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சங்க இலக்கிய ஆதாரங்கள்
இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் கரிம மூலக்கூறு ஆய்வுகளும் குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு மற்றும் பொருநராற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அன்றாட வாழ்வியல் குறிப்புகளோடு ஒத்துப்போவது வரலாற்றுச் சிறப்புமிக்க சான்றாக அமைந்துள்ளது.


