சென்னை: தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக தலைமையிலான புதிய அரசு கடந்த மூன்று மாதங்களில் மூலதனத் திட்டங்களுக்காக ரூ.20,881 கோடி கடன் வாங்கியுள்ளது.
இதே காலகட்டத்தில் தமிழக அரசின் நிலுவைக் கடன்களுக்கான ரூ.14,618 கோடி வட்டியாகச் செலுத்தப்பட்டது என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு தனது முதல் வரவு-செலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அரசின் நிதி நிலைமை குறித்த தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளன.
தமிழக அரசுக்கு மாநில சரக்கு, சேவை வரி முத்திரைத்தாள்-பதிவுக்கட்டணம், விற்பனை-வர்த்தகம் மீதான வரி உள்ளிட்ட பல வகைகளில் வருவாய் கிடைக்கிறது.
அந்த வருவாய், அரசுப் பணியாளர்களின் ஊதியம், ஓய்வூதியம், பெற்ற கடனுக்கான வட்டித்தொகை ஆகியவற்றுக்காகச் செலவிடப்படுகிறது.
எனினும், வரவைவிட செலவுகள் அதிகம் என்பதால் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் கடும் பொருளியல் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஆட்சி நடத்த வேண்டியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசாங்கம் அவ்வப்போது கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. மேலும், வங்கியிலும் கடன்கள் பெறப்படுகின்றன. இவற்றுள் கடன் பத்திரங்கள் வாயிலாக பெறப்படும் கடன் தொகைதான் அதிகம்.
இவ்வாறு பெறப்படும் கடன்களைக் கொண்டு மாநிலம் முழுவதும் சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் தமிழக அரசுக்காக ரூ.20,881 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழக அரசின் மொத்த கடன் சுமை பத்து லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில், அரசு மேலும் கடன் வாங்க இருப்பது முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய திமுக அரசு மூச்சு முட்டும் அளவுக்குத் தமிழக அரசின் கடன் சுமையை ஏற்றிவிட்டதாக அன்றைய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில் புதிய அரசும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாக வெளியான தகவல் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தற்போது நிலுவையில் உள்ள கடனுக்காகத் தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் ரூ.14,618 கோடி வட்டிக்காகச் செலவிட்ட நிலையில், புதிதாக வாங்கும் கடன்மூலம் நிலுவை வட்டிக்காக ரூ.76,452 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளது.
மொத்த வருவாயில் வட்டி செலவீனத்தின் பங்கு மட்டும் 22.82 விழுக்காடாகும்.

