சென்னை: ‘ஜனநாயகன்’ படத்துக்கு அமேசான் பிரைம் நிறுவனத்தின்மூலம் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் படம் வெளிவராததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் கேட்கிறது.
இந்தப் படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைமுக்குப் பெருந்தொகைக்கு விற்கப்பட்டது. படம் வெளிவந்து சில நாள்களிலேயே ஓடிடியில் ஒளிபரப்பாகும் விதமாக அதன் உரிமம் பேசப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்படட்டது.
ஆனால், படம் வெளிவரத் தாமதம் ஆவதால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அமேசான் பிரைம் நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனத்தை எச்சரித்துள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கைப் பிரச்சினையால் பொங்கலுக்கு வெளிவராமல் தள்ளிப்போனது.
உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தாலும் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிவிட்டது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிற நிலை.
இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) நடைபெற்றது. ஜனநாயகன் தயாரிப்பாளர் தரப்புக்கும் தணிக்கை வாரியத் தரப்புக்கும் தலா அரைமணி நேரம் வாதாட நேரம் கொடுக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். இதனால் படம் எப்போது வெளியாகும் எனத் தெரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இப்போது படத்துக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

