புதுடெல்லி: சங்க கால தமிழர்களின் நாகரிகத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அனுமதி வழங்கியுள்ளது.
கீழடியில் இதுவரை நான்கு விழுக்காட்டுக்கும் குறைவான பரப்பளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11ஆம் கட்ட ஆய்வு மூலம் வைகை நதிக்கரை நாகரிகம் பற்றின மேலும் பல தகவல்களை வெளிக்கொணரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடியுடன் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் தொடர வாய்ப்புள்ளது.
கீழடியில் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நதிக்கரை நாகரிகத்தைக் கண்டறியும் அகழாய்வுகள் தொடங்கின. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
இதுவரை 10 கட்ட அகழ்வாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. 20,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு நடைபெறும். பின்னர் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்கள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசின் காபா அமைப்பு அடுத்த கட்ட ஆய்விற்கு அனுமதி வழங்கும். 11ஆம் கட்ட அகழ்வாய்வு ஜனவரியில் தொடங்கி செப்டம்பர்வரை நடைபெற வாய்ப்பு உள்ளது.
தற்போது கீழடிப் பகுதியில் நடைபெற்று வரும் திறந்த வெளி அருங்காட்சியகப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஜனவரியில் அது திறக்கப்பட்டதும் மீண்டும் அகழாய்வு பணி தீவிரமாக நடைபெறும் எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

