சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

படம்: இந்து தமிழ் திசை

24 Oct 2026 - 7:41 pm

2 mins read

நீலகிரி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உதக மண்டலத்துக்கு வரவேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) ஒரே நாளில் அங்கு பர்லியார்பகுதியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவானது.

கீழ்கோத்தகிரியில் 20 சென்டி மீட்டர், எடப்பள்ளியில் 16.1 சென்டி மீட்டர், கோத்தகிரியில் 13.7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பத்து இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.

விழுந்த மரங்கள், பாறைகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை, நிலச்சரிவு அபாயம் காரணமாக, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அடுத்த மூன்று நாள்களுக்கு உதகைக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நீலகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து

பர்லியாறு பகுதியில் சனிக்கிழமை (அக்டோபர் 24) காலை ஏற்பட்ட திடீர் மண்சரிவில் அரசுப் பேருந்து ஒன்று சிக்கியதில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பேருந்து டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் அனைவரும் பாதிவழியில் இறக்கிவிடப்பட்டிருந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திண்டுக்கல் நிலவரம்

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நீடித்துவரும் கனமழையால் அடுக்கம் மலைச்சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், மிகப்பெரிய பாறைகளும் சரிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்தச் சாலையில் சில பகுதிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் பள்ளங்கள் காணப்பட்டன.

அடுக்கம் பகுதியைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் தங்கள் விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லவும் இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கும் இச்சாலையையே பெரிதும் நம்பியிருந்தனர்.

தற்போது போக்குவரத்து முடங்கியுள்ளதால் அக்கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அர்னாப் புயல்

இதனிடையே, வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் திங்கட்கிழமையன்று அது அர்னாப் புயலாக உருவெடுக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் வரும் 28ஆம் தேதி காலை ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்