பரந்தூர் பசுமைவழி விமான நிலையத்துக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு

பரந்தூர் பசுமைவழி விமான நிலையத்துக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு

2 mins read
a47b817c-b730-4d83-bd21-b63012bec8de
சாலை மறியல், உண்ணாவிரதம் என ஏறக்குறைய ஆயிரம் நாள்களுக்கு மேலாக பரந்தூர் பகுதியில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. - கோப்புப்படம்: ஏபிபி லைவ்

சென்னை: பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் அமைக்க மாற்று இடங்களை அடையாளம் காண்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு உள்ளூர் மக்கள், விவசாயிகளிடையே நிலவிவரும் கடும் எதிர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுப் பிரச்சினைக்காகத் தவெக தலைவர் விஜய், தமது அரசியல் பயணத்தில் முதன்முறையாகப் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துதான் போராட்டம் நடத்தினார்.

இதனால், தவெக ஆட்சி அமைத்த பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் விமான நிலையத்துக்காக விவசாய நிலங்கள், நீர்நிலைகளை எதற்காக அழிக்க வேண்டுமென அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசு ஆதரவாக இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று முறை முப்போகம் விளையும் வளமான விவசாய நிலங்களை அழித்து, புதிய திட்டங்களைச் செயல்படுத்த இயலாது என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகத் தமிழக எரிசக்தி, சட்டத்துறை அமைச்சரான அவர் தெரிவித்தார்.

பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பீட்டில், 12 கிராமங்களை உள்ளடக்கிய 5,746 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் ஏறக்குறைய 2,500 ஏக்கர் பரப்பளவு தனியார் பட்டா நிலங்களாகும்.

இத்திட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, வருவாய்த்துறை 1,700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டையும் வழங்கியிருந்தது.

எனினும், ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விமான நிலையத் திட்டத்துக்கான எதிர்ப்பு குறைந்தபாடில்லை.

சாலை மறியல், உண்ணாவிரதம் என ஏறக்குறைய ஆயிரம் நாள்களுக்கு மேலாகப் பரந்தூர் பகுதியில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

சென்னையின் விமானப் போக்குவரத்துச் சேவையைப் பூர்த்தி செய்யும் பரந்தூர் திட்டத்தால் சூற்றுச்சுழல் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையத்துக்கான மாற்று இடத்தைத் தேடிவருவதாகத் தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பரந்தூர்விமான நிலையம்தவெகபோராட்டம்விவசாயிகள்விஜய்மாநில அரசு