சென்னை: தமிழ்நாட்டில் அமையவுள்ள மாதிரி பதிவு நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆவணப் பதிவுக்கான சட்டபூர்வ அதிகாரம் பதிவுத்துறையிடமே இருக்கும் என்று அது உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
“தமிழகத்தில் ஆவணப்பதிவு, திருமணப் பதிவுச் சேவைகளை எளிமைப்படுத்தி வேகமாக வழங்க மாநிலம் முழுவதும் 25 மாதிரி பதிவு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
“நடப்பு (2026–27) நிதி ஆண்டில் முதல்கட்டமாக ரூ.7.84 கோடியில் சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோவை வடக்கு ஆகிய ஐந்து பதிவு மாவட்டங்களில் மாதிரி நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“அதேநேரம், பதிவுத்துறையின் சட்டபூர்வப் பொறுப்புகளை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. தற்போது சார்பதிவாளர்கள் ஆவணங்களை சட்டப்படி பரிசீலித்துப் பதிவு செய்வதுடன், மக்களுக்கான உதவி, அடிப்படை வசதிகள் பராமரிப்பு உள்ளிட்ட முகப்பு நிர்வாகப் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது.
“அப்பணிகளை பிரித்து சார்பதிவாளர்கள் சட்டரீதியான ஆவணப் பரிசீலனையில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலேயே மாதிரி பதிவு மையங்கள் உருவாக்கப்படுகின்றன,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நிலையங்களின் கட்டமைப்பு, தினசரி செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள் மட்டுமே ஒப்பந்தப் புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு தனியார் சேவை வழங்குநரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்,” என்று அதிகாரிகள் கூறினர்.
இதனால் ஆவணங்களைப் பரிசீலித்து பதிவு செய்வதற்கான சட்டபூர்வ அதிகாரம் சார்பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கும். தற்போதைய பதிவு நடைமுறைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது.
தற்போது சொத்து அமைந்துள்ள பகுதியின் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவுசெய்ய முடியும். புதிய மாதிரி நிலையங்கள் மூலம், ஒரே பதிவு மாவட்டத்துக்குள் வசதியான மையத்தில் பதிவுச்சேவை பெறலாம்.
ஐந்து நிலையங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், மேலும் 20 நிலையங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
