சென்னை: தமிழ் வழிக் கல்வி பயின்றதாக போலிச் சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.
பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் முறைகேடு நடப்பதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில், காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறைப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தொலைதூரக் கல்வி மூலம் 4 பேர் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலியாகப் பட்டம் பெற்றது, விசாரணையில் தெரிய வந்தது.
அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 மூலம் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலை ஒதுக்கீட்டில் 20 விழுக்காடு சலுகை அளிக்கப்படுகிறது. அந்தச் சலுகையை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி வேலைக்குச் சேர்ந்ததும் தெரிய வந்தது.
வணிகவரி உதவி ஆணையர் சொப்னா (திருப்பரங்குன்றம்), காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சதீஷ்குமார் (ஆத்தூர்), வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி (காஞ்சிபுரம்) ஆகியோர் அவ்வாறு முறைகேடாக வேலை செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ.சங்கீதா மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
உடந்தையாக இருந்த தொலைதூரக் கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


