மீண்டும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி: திமுக திட்டம்

மீண்டும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி: திமுக திட்டம்

1 mins read
b611bf6b-083c-412d-859a-a295f002f6b3
திமுக ஆட்சியில் முன்பு குடும்பத்துக்கு ஒரு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றது. - படம்: நக்கீரன்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகள் வெகுவாகக் கவனிக்கப்படுகின்றன.

திமுக ஆட்சியில் முன்பு குடும்பத்துக்கு ஒரு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதுதான் அத்தேர்தலின் கதாநாயகன் என்றும் வருணிக்கப்பட்டது. எனினும், அடுத்து அமைந்த அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக தயாரிக்கும் அறிக்கையில் மீண்டும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இம்முறை ‘எல்இடி’ வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அல்லது திறன்பேசி வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தற்போது இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தவும் திமுக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இம்முறை தேர்தல் வாக்குறுதி தயாரிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு கனிமொழி எம்பி தலைமை ஏற்றுள்ளார்.

‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற முழக்கத்துடன் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

மேலும், திமுகவின் அதிகாரத்துவ இணையத்தளத்தின் மூலமாகவும் கருத்துகள் சேகரிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்