சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், பெருநகரச் சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாக, மாநகராட்சிப் பகுதிகளில் 104,650 மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மரக்கன்றுகளைத் தடையின்றி வழங்குவதற்காக மயிலாப்பூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
வனத்துறை, தனியார் பண்ணைகளிடம் இருந்தும் தரமான மரக்கன்றுகள் பெறப்பட்டு நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 993 பூங்காக்கள், 417 பள்ளிகள், திறந்தவெளி இடங்கள், மயான பூமிகள், விளையாட்டுத் திடல்கள், ஏரி, குளங்களின் கரையோரங்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மெரினா, பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் மீட்டெடுக்கப்பட்ட இடங்களிலும் பசுமைப்பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு நலச்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டுன்றன.
அரசின் இந்தத் துரித நடவடிக்கையால் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், எதிர்காலத்தில் நகரின் வெப்பநிலை குறையவும் வழிவகுக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
