தமிழகத்தில் இணைய வழி பத்திரப்பதிவுக்கு பெரும் வரவேற்பு

தமிழகத்தில் இணைய வழி பத்திரப்பதிவுக்கு பெரும் வரவேற்பு

2 mins read
c0d2c8b3-f2ea-400a-8ff2-4b141b111fc5
தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் இனி சொத்துகள் வாங்குவோர், அவற்றைப் பதிவுசெய்ய சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டில் இருந்தபடியே சொத்துகளைப் பதிவு செய்ய முடியும். இதற்காக ‘ஸ்டார் 3.0’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்புதிய திட்டத்தின்கீழ் முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் 187 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகப் பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பத்திரப்பதிவுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாடு பதிவுத்துறை சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சேவை விநியோகத்தை வேகப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, புதிய வீடுகள், குடியிருப்புகள், மனைப் பிரிவுகளை வாங்குவோர், இனி அலைச்சலின்றி வீட்டிலிருந்தோ அல்லது கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்தோ ஆவணங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அரசின் இந்தப் புதிய திட்டத்தால் அலைச்சல் குறைந்துள்ளதாகவும் இடைத்தரகர்களின் தலையீடு அறவே தடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பத்திரப்பதிவு அலுவலகங்களில் தொடர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் லஞ்சம் வாங்குவது அறவே குறைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு (Aadhaar OTP) மற்றும் மின்னணு கையொப்பம் மூலம் இந்த ‘ஃபேஸ்லெஸ்’ (Faceless) நடைமுறை சாத்தியமாகியுள்ளது. பதிவுத்துறை அலுவலர்கள் தெரிவித்த தகவலின்படி, முதல் நாளில் பதிவான 187 பத்திரங்களில் பெரும்பான்மையானவை வீட்டு மனைகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.  

இணையம் வழி சொத்துகளைப் பதிவு செய்யும்போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது சந்தேகங்கள் எழுந்தால், அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய பதிவுத்துறை தலைமையகத்தில் தனிக் கட்டுப்பாட்டு அறையும் சிறப்பு உதவிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கும் சொத்து விற்பனையாளர்களுக்கும் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்