சென்னை: தீபாவளித் திருநாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவ்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பட்டாசு வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுவதாகவும் காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் உடல் மற்றும் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 அக்டோபர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருள்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்திருந்தது.
அதன்படி, 2018 முதல் தீபாவளிப் பண்டிகையன்று, காலை 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளி நாளன்றும் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் நலப் பாதிப்புகள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தீபாவளியின்போது டெல்லியில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பசுமைப் பட்டாசுகளை வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறிப்பிட்ட நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், தமிழகத்திலும் அதேபோல் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தையும், நாள்களையும் அதிகரிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.