தஞ்சாவூா்: தஞ்சாவூர் பெரிய கோயில் வாயிலில் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ. 5 லட்சம் செலவில் புதிதாகக் காவல் உதவி மையமும் சுற்றுலாத் தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், “புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தகவல் மையத்தில் இம்மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களைப் பற்றிய படங்கள், வழித்தடங்கள், பல்வேறு சுற்றுலாத் தலங்களின் விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“இம்மையத்தின் மூலம் தஞ்சாவூா் பெரிய கோயில், சரஸ்வதி மகால், அரண்மனை, கும்பகோணம் தாராசுரம், சோழா்களின் வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்கள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்களைச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுற்றிக் காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
“இதனைச் சுற்றுலாப் பயணிகள் சிறந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.
தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றக்கூடிய தஞ்சை பெரியகோயில் இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி நிர்வாகத்துக்கும் கட்டடக் கலைக்கும் வேளாண்மைக்கும் உலகுக்கே வழிகாட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் கட்டியெழுப்பிய தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற மதிப்பையும் பெற்றுள்ளது.