தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களுக்கு வாய்ப்பு; திமுக மூத்த நிர்வாகிகள் கலக்கம்

2 mins read
4f2a3ea3-3b9c-401f-9842-2bcec9650b5c
2026 சட்டமன்றத் தேர்தலில் இளையர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. - கோப்புப்படம்: தமிழக ஊடகம்

சென்னை: வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இளையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் திமுக இளையரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில மாதங்களுக்குமுன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்றும் அடுத்த வகுப்பிற்குச் செல்லாமல் சிலர் அதே வகுப்பில் உட்கார்ந்திருக்கின்றனர் என்று அவர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அது, திமுகவின் மூத்த நிர்வாகிகளைக் கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருந்தது என்ற பேச்சு அடிபட்டது.

அவரது பேச்சை ஒத்துக்கொள்ளும் வகையில், ‘கட்சியின் மூத்த நிர்வாகிகள் இளையர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்று உதயநிதி பேசியது மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இப்போதைய மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை உணர்த்தும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனப் புதிய கட்சி தொடங்கியிருப்பது, சீமானின் நாம் தமிழர் கட்சியிலும் இளையர்கள் அதிகமாக இருப்பது போன்றவற்றால் கவனமாகச் செயல்பட திமுக திட்டமிடுகிறது.

அதனை உணர்ந்தே, அடுத்த தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில், கட்சிக்காகத் துடிப்புடன் செயல்பட்டுவரும் இளையர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, இளைய தலைமுறையினரைக் கவர வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்கான நடவடிக்கைகளில் உதயநிதி ஈடுபட்டு வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால்தான் கட்சி தங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை, களத்தில் திமுகவிற்காக உழைக்கும் இளையர்கள் உணர்வர் என்று முதல்வரிடம் உதயநிதி குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், சில புள்ளிவிவரங்களையும் அவர் தம் தந்தையிடம் வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “நிறைய இளையர்கள் திமுக நோக்கி வருகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் பலம். அவர்களுக்கு வழிவிட வேண்டும்,” என்று திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் பேசியிருந்தார். இன்னொரு மூத்த அமைச்சரான பொன்முடியும் “அடுத்த தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை,” எனக் கூறியிருந்தார்.

மூத்த அமைச்சர்களே இப்படிப் பேசியது மற்ற மூத்த நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

அதே நேரத்தில், மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராமல் அவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும், தேர்தலுக்குப்பின் மூத்த நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் போன்ற பதவிகளை வழங்குவது குறித்தும் திமுக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்