திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்; அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்தியவர்

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்; அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்தியவர்

2 mins read
214fce78-1821-4471-b020-cf10429ad11b
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். - படம்: தி இந்து
multi-img1 of 3

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) திமுகவில் இணைந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்தை வெள்ளிக்கிழமை காலை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது திமுகவில் அவர் இணைவதை உறுதி செய்வதாக உள்ளது என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை வழிநடத்தி வந்தார். அதே வேளையில், அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

ஆனால் அதற்கு அதிமுக தலைமை சம்மதிக்கவில்லை. எனவே அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது.

பிறகு ஒருமுறை தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு நடந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவை வெள்ளிக்கிழமை காலை சந்தித்து எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவது குறித்து கடிதம் அளிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கேற்ப, சென்னை அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஓபிஎஸ்.

அதிமுகவைக் கைப்பற்ற முன்பு தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் மீண்டும் சசிகலாவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா புதுக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

எனவே, ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழலில், மூன்று முறை அதிமுக சார்பில் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த ஓபிஎஸ், கட்சியின் பரம எதிரியான திமுகவின் இணைந்துள்ளார். அவரது மகனும் வேறு சில ஆதரவாளர்களும்கூட திமுகவில் இணைந்தனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் திமுக வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்