சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பலவும் தேர்தல் பணிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் முடுக்கிவிட்டுள்ளன.
இதனிடையே, தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 11) தொடங்கியுள்ளன. ஜனவரி 24ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் அவை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக் குழுக்கூட்டம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாமகவினரும் வரும் 14ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தத் தேர்தலாக இருப்பினும், அரசுக் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் முன்பே விருப்ப மனுக்களைப் பெறுவது வழக்கம். இதன் மூலம் சில தகவல்களை அக்கட்சிகள் நாசூக்கான முறையில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தும்.
எத்தனை விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகை, கட்சிப் பிரமுகர்களில் யார் பெயரில் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் அளிக்கப்பட்டன, கட்சித் தொண்டர்களின் மனநிலை எனப் பல அம்சங்கள் கவனிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கேற்பவே, சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை, எதிர்க்கட்சிகள் தேர்தல் வியூகங்களை அமைப்பது வழக்கம்.
அதிமுக, பாமக கட்சிகள் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு விருப்ப மனுக்களைப் பெற உள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் தேர்தல் களத்தில் விறுவிறுப்பும் போட்டியும் மெல்ல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகள், விருப்ப மனுக்களைப் பெறுவதன் மூலம் குறிப்பிட்ட சில பகுதிகளில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக எடுத்துக் கூறுவதும் தமிழகத்தில் வாடிக்கையாக நடப்பதுதான்.
இம்முறை தமிழக காங்கிரஸ் 125 தொகுதிகளை அடையாளம் கண்டு விருப்ப மனுக்களைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை, விஜய்யின் தவெக கூட்டணிக்குள் வந்தால் ஒரு கணக்கு, இல்லையேல் வேறொரு கணக்கு என்ற அடிப்படையில், களப்பணியாற்றத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவரான விஜய்க்கு அளிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழகத் தேர்தல் களம் மேலும் களைகட்டும்.

