தமிழகத் தேர்தல் திருவிழாவின் கடந்த காலம் - 2

தமிழகத் தேர்தல் திருவிழாவின் கடந்த காலம் - 2

1 of 8
கோப்புப்படம்: ஐடிஎஸ் தமிழ்
கோப்புப்படம்: ஒன் இந்தியா
கோப்புப்படம்: பிபிசி
கோப்புப்படம்: விகடன்
கோப்புப்படம்: விகடன்
கோப்புப்படம்: பிபிசி
கோப்புப்படம்: டிஎம்கே சோஷியல்
கோப்புப்படம்: பிபிசி

04 Apr 2026 - 3:29 pm

4 mins read

ஐந்தாவது தேர்தல் 1971

1971ம் ஆண்டு ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் மார்ச் மாதம் நடத்தப்பட்டது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் சுதந்திரா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 184 தொகுதிகளைப் பிடித்து மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது. திமுக கூட்டணி மொத்தமாக 205 இடங்களை வென்றது. 201 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 15 இடங்களே பிடித்தது. மீண்டும் கலைஞர் கருணாநிதி முதல்வரானார்.

ஆறாவது தேர்தல் 1977

1971ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

பின்னர் 1975ம் ஆண்டு நாடு முழுவதும் அவசரநிலையைக் கொண்டு வந்தார் பிரதமர் இந்திரா காந்தி. இந்த அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்ததால் திமுக அரசு கலைக்கப்பட்டது. மிசா சட்டத்தில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அவசரநிலையை அறிவித்த பிரதமர் இந்திரா காந்தியை அதிமுக ஆதரித்தது. இதன்பிறகு 1977ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்தது.

இதில் அதிமுக 130 இடங்களைப் பிடித்தது. திமுகவோ 48 இடங்களிலேயே வென்றது. எம்ஜிஆர் முதல்முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

ஏழாவது தேர்தல் 1980

தமிழக சட்டமன்றத்திற்கான ஏழாவது தேர்தல் 1980ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது. இதில் இந்திரா காங்கிரசுடன் இணைந்து திமுக கூட்டணியை அமைத்தது. அதிமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது.

இதில் அதிமுக கூட்டணி 162 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் 129 இடங்களைப் பிடித்தது. திமுக கூட்டணி 69 இடங்களையே பிடித்தது. திமுக தனித்து 37 தொகுதிகளில் வென்று 22 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. எம்ஜிஆர் மீண்டும் முதல்வராகத் தேர்வானார்.

எட்டாவது தேர்தல் 1984

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் தேர்தல் நடந்தது. ஏனெனில் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ்காந்தி தன் பலத்தை நிரூபிக்க விரும்பி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதற்கிடையே உடல்நலக் குறைவால் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெறச் சென்றார்.

இந்நிலையில் மாநில அரசையும் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க அதிமுக விரும்பியது. காரணம், இந்திரா காந்தியின் படுகொலையால் காங்கிரஸ் கட்சிக்கு அனுதாப அலை வீசியது. இதனால் அதிமுகவும் காங்கிரசும் சேர்ந்து கூட்டணி அமைத்தன.

இதில் அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களைப் பிடித்தது. திமுக கூட்டணி 34 இடங்களிலேயே வென்றது. இதில் திமுக 24 இடங்களில் தனித்து வென்றது.

ஒன்பதாவது தேர்தல் 1989

இந்தத் தேர்தல் 1989ம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நடந்தது. இதற்கிடையே 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் காலமானார்.

இதனையடுத்து அதிமுக கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி முதல்வராகப் பதவியேற்றார்.

இருந்தும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சில இடையூறுகள் ஏற்பட, அதனைக் காரணம் காட்டி பிரதமர் ராஜீவ் காந்தியால் அவரின் அரசு கலைக்கப்பட்டது. ஓராண்டுக்கு அதிபர் ஆட்சி அமலில் இருந்தது.

பின்னர் 1989ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் திமுகவை எதிர்த்து அதிமுக ஜானகி அணி, அதிமுக ஜெயலலிதா அணி எனப் போட்டியிட்டன. இதில் திமுக 150 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

திமுக 33 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தது. திமுக கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களில் வென்றிருந்தன. மொத்தமாக திமுக கூட்டணி 169 இடங்களைப் பிடித்தது. கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானார்.

பத்தாவது தேர்தல் 1991

இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சி சிறப்பாக நடந்தது. இந்நிலையில் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியின் மீது வைக்கப்பட்ட அழுத்தத்தால் அவர் திமுக ஆட்சியைக் கலைத்தார். தமிழகத்தில் அதிபர் ஆட்சி மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையே மே மாதம் 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தேர்தல் நடக்க, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த அதிமுக 164 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மோசமான தோல்வியைச் சந்தித்தது. கலைஞரும் இளம்வழுதியும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். ஆனாலும், திமுகவின் வாக்கு விகிதம் என்பது 22.5% ஆக இருந்தது. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.

- பார்வை நீளும்

குறிப்புச் சொற்கள்