சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்பது அதிமுகவின் முடிவு. போலியான வெற்றியைப் பெறுவதற்கு திமுகவினர் ஏராளமாக செலவு செய்வார்கள். அதனால் தேர்தலை நாங்கள் புறக்கணித்துள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
“பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு. சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம்,” என்றார் அவர்.
திமுகவின் பொங்கல் பரிசு பற்றிக் கூறிய அவர், “அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது திரு.ஸ்டாலின், ஐயாயிரம் கொடுக்கலாமே என்றார். இப்போது அவர் எதுவுமே கொடுக்கவில்லை. இதனால் திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்,” என்றார்.
இந்த முறை பொங்கலுக்கு தமிழகத்தில் பொங்கல் பரிசாக பணத்திற்குப் பதில் அரிசி உள்ளிட்ட பொங்கல் வைக்கத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களுடன் கூடிய தொகுப்புகளையும் வேட்டி, சேலைகளையும் நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கியது.
இதற்கிடையே, பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக நிதி உதவி வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்கக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் வழக்கு தாக்கல் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்குவதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.