தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் நம் பக்கம்: செயலியை வெளியிட்டு விஜய் பேச்சு

2 mins read
8ebf0960-6c98-4342-8dd1-c6165b87f4cf
உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்க ‘மைடிவிகே’ (MYTVK)  என்னும் கைப்பேசிச் செயலியை வெளியிட்ட விஜய். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைப்பேசிச் செயலியை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை (ஜூலை 30) அறிமுகம் செய்தார்.

சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

‘மைடிவிகே’ (MYTVK) எனப்படும் அந்தச் செயலியை அறிமுகம் செய்த பின்னர் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

“இதற்கு முன்னால் தமிழக அரசியலில் 1967 மற்றும் 1977 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. 

“அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களிலும், ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் என அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர். 

“ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என அனைத்து மக்களையும் சந்தித்தனர்.

“அண்ணா சொன்ன அதே விஷயத்தை நானும் இங்கே சொல்ல விரும்புகிறேன், ‘மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு’. 

“இதைச் சரியாக செய்தாலே போதும். அதனால்தான் இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

“இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்,” என்றார் விஜய்.

முன்னதாக ’வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையின்கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு தவெக உறுப்பினர் அட்டையை அவர் வழங்கினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனைச் சந்திக்க தவெக தீவிரமாக இறங்கி உள்ளது. தவெக. சார்பாக ‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்புப் பணிகளை பலப்படுத்துவதில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்