சென்னை: தவெக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு தேர்தல் அலுவலர் அனுமதி தர மறுத்துவிட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பெரம்பூரில் தொடங்கி, விருகம்பாக்கம் பகுதி வரை ஐந்து இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டு பேசத் திட்டமிட்டிருந்தார். இதற்காக தேர்தல் ஆணையச் செயலி மூலமாகவும் நேரடியாக மனு அளித்தும் அனுமதி கோரப்பட்டது.
மேலும், 5,000 பேர் இந்தப் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பார்கள் என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, பெரம்பூரில் தவெக பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த பகுதியில் காவல்துறையினரும் தேர்தல் அலுவலரும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த இடத்தில் 3,000 பேர் மட்டுமே கூட முடியும் என்பது தெரிய வந்ததால் தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட தவெக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த அனுமதி மறுப்புக்குப் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக தவெக நிர்வாகிகள் புகார் எழுப்பியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்
இதனிடையே, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள திரு ஆனந்த், 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய், சென்னையில் உள்ள நட்சத்திர தங்குவிடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துவைப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

