சென்னை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 11) தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
குறிப்பாக, சுற்றுலா விசாவில் அங்கு சென்று உடனடியாக நாடுதிரும்பும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளையர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.
இதனால் அவர் வைத்திருந்த பெரிய பெட்டியை சோதனையிட்டபோது அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரிய வகை பாம்புகள், ஆமைகள், பல்லிகள் போன்றவை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆப்பிரிக்காவில் வசிக்கும் செல்கட்டா ஆமைகள், தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் வசிக்கும் அரிய வகைப் பல்லிகளை அந்த இளையர் கடத்தி வந்திருப்பது உறுதியானது.
மேலும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 12 மலைப்பாம்புகள், ஆஸ்திரேலியாவில் காணப்படும் உடும்புகள், வெள்ளை நிற அரச நாகம் என 31 அரிய வகை உயிரினங்களும் அந்த இளையரின் பெட்டிக்குள் ஊர்ந்துகொண்டிருந்தன. இதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
செல்வந்தர்கள் வசிக்கும் பங்களாக்களில் இதுபோன்ற அரிய வகை உயிரினங்களை வளர்ப்பார்கள் என்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்த விலங்குகள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது என்றும் அந்த இளையர் தெரிவித்துள்ளார்.
இந்த விலங்குகளைப் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

