சென்னை: தமிழகத்தில் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் புதிய அடையாள முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சுகாதார, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதனை தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை புதன்கிழமை இளையர் ஒருவர் கத்தியால் குத்தியதைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
ஆனால் புதன்கிழமை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவரித்தார்.
“அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களை அடையாளம் காண்பதற்காக கைகளில் அடையாள அட்டை(டேக்) கட்டும் பணி சோதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இது நடைமுறைக்கு வரவுள்ளது,” என்றார்.
இதற்கிடையே கத்திக் குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தேறி வருகிறார்.
தான் நலமுடன் இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனியன் சந்தித்தபோது அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தனது தலைக்காயங்களுக்கு தையல் போட்டுள்ளதாகவும் நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ‘பேஸ் மேக்கர்’, சோதனை, இசிஜி எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
பிரேமா என்பவரின் மகன் விக்னேஷ், 23, தனது தாயாருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை அவரது அறைக்குள் சென்று கத்தியால் சரிமாரியாகக் குத்தினார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அங்குள்ள மருத்துவர்களும் ஊழியர்களும் விக்னேஷை சரமாரியாக அடித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த கிண்டி காவல்துறையினர் விக்னேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் தனது மகன் மருத்துவரை கத்தியால் குத்தியது தெரியாது என்று விக்னேஷின் தாயார் பிரேமா செய்தியாளர்களிடம் கூறினார்.
“கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்க மாட்டார். என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம். என் மகன் செய்தது சரியல்ல. தாய்ப் பாசத்தில் செய்து விட்டான்,” என்று பிரேமா கூறியதாக தினத்தந்தி தகவல் தெரிவித்தது.