சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை அமைக்க தமிழக அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் (ஐடி விங்) பலப்படுத்த வேண்டும் என அக்கட்சிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரம் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் கட்சித்தலைமை, தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தகுந்த நிர்வாகிகளை நியமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில், ‘ஐடி’ பிரிவுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது அதிமுக தலைமை.
சமூக ஊடகங்களில் சிறு, குறு காணொளிகளை வெளியிடுதல், ‘ரீல்ஸ்’, ‘ஷார்ட்ஸ்’, ‘ஸ்டேட்டஸ்’ ஆகியவற்றை வெளியிடுதல், கட்சியின் முக்கிய அறிவிப்புகளைச் சுருக்கமாகப் பதிவிடுதல் என பல்வேறு பணிகளுக்கும் தகுதியான இளையர்களை, நிர்வாகிகளை நியமிக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை, திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
எனவே, இக்கட்சிகளுக்கு இணையாக அதிமுகவும் இணைய வெளியில் இயங்க வேண்டும் என அக்கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
கட்சி நிர்வாக வசதிக்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து தலா இருவர் வீதம், ஐடி பிரிவின் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“எளிய மக்களுக்கான அரசியலைப் பேசக் கூடியவர், மாநில அரசியல் அதிர்வுகளைக் கவனிப்பவர், சமூக ஊடகங்களைத் தன் அரசியல் பாதையாக ஆக்கிக்கொண்டவர், மாவட்ட அரசியல் அசைவுகளை அறிந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவும் பாஜகவும் இணைய வெளியில் நேருக்கு நேர் மோதி வருகின்றன. பிரதமர் மோடி, தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று இணையம் மூலம் திமுக பிரசாரம் மேற்கொண்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவும் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்று இணையத்தில் முழக்கமிட்டது.
இந்த மோதல் தற்போது, ‘கெட் அவுட் மோடி’, கெட் அவுட் ஸ்டாலின்’ என்று பெரிதாகிவிட்டது.
அரசியல் கட்சிகள், ஒன்றுக்கொன்று சவால்விடுத்து இணையத்தில் மோதுவது இயல்பாகிவிட்ட நிலையில், அதிமுகவும் தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவை பலப்படுத்த முனைந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி தொலைக்காட்சி அலைவரிசைகள் வைத்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கவனம் செலுத்தி வருகின்றன.