பூம்புகார் கடலடி அகழாய்வு: ‘டார்பிடோ ஜாடி’, உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

பூம்புகார் கடலடி அகழாய்வு: ‘டார்பிடோ ஜாடி’, உறைகிணறுகள் கண்டுபிடிப்பு

1 of 2
படம்: இடிவி பாரத் தமிழ்நாடு
படம்: இடிவி பாரத் தமிழ்நாடு

25 Sep 2026 - 6:28 pm

2 mins read

மயிலாடுதுறை: பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட கடலடித் தொல்லியல் அகழாய்வில் ‘டார்பிடோ ஜாடி’ துண்டுகள் உட்பட நான்கு பழமையான உறை கிணறுகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அண்மையில் கண்டறிந்துள்ளது.

பண்டையத் தமிழர்களின் கடல்சார் வணிகம், பூம்புகார் நகரின் வரலாற்றை உணர்த்தும் முக்கிய தொல்லியல் தடயங்களாக இவை மயிலாடுதுறைப் பகுதியில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பூம்புகார் மற்றும் திருமுல்லைவாயில் இடையே கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்தில் இத்தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகத் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பொறுப்பு இணை இயக்குநர் யதீஸ்குமார் தலைமையிலான தொல்லியல் நிபுணர்கள் குழு இந்த முக்கியத் தடயங்களைக் கடலுக்கு அடியில் கண்டெடுத்துள்ளது.

மேற்கு ஆசியப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் பீங்கான் வகை ‘டார்பிடோ ஜாடி’ பூம்புகார் கடற்பகுதியில் கிடைப்பது இதுவே முதல்முறை.

நீண்ட உருளை வடிவம் கொண்ட இச்சாடிகள், பண்டைக் காலத்தில் கடல் வழியாக எண்ணெய், மது போன்ற திரவப் பொருள்களை நீண்டதூரம் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வுப் பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள்.
ஆய்வுப் பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள். - படம்: இடிவி பாரத் தமிழ்நாடு

மேலும், 60 முதல் 65 சென்டிமீட்டர் விட்டமுடைய நான்கு பழமையான உறை கிணறுகளும் 250க்கும் மேற்பட்ட பானை ஓடுகளும் அங்குத் தொல்லியல் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடலடியில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பழங்காலத்தில் ‘பாலியோ சேனல்’ எனப்படும் பழைய ஆற்றுப்பாதை அல்லது குடியிருப்புகள் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

“அறிவியல் ஆய்வுகள் மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரம் குறித்த புரிதல் மேலும் விரிவடையும்,” என்று தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சங்க இலக்கியங்களில் புகழப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் அனைத்துலகக் கடல் வணிகத் தொடர்புகளை விரிவாக ஆராயத் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து திட்டமிட்டுள்ளது.

இயற்கைப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் பூம்புகார் கடற்பகுதியில், தொல்லியல் நிபுணர்கள் மேலும் விரிவான அடுத்தகட்ட அகழாய்வுகளை விரைவில் மேற்கொள்ள உள்ளனர்.

வெவ்வேறு மட்பாண்டப் பொருட்களின் உடைந்த துண்டுகள்.
வெவ்வேறு மட்பாண்டப் பொருட்களின் உடைந்த துண்டுகள். - படம்: இடிவி பாரத் தமிழ்நாடு
குறிப்புச் சொற்கள்