சென்னை: தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கும் வகையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில், 20% இடம் ஒதுக்கப்பட வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியானது. பின்னர் அவ்வப்போது மேலும் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
அரசாணைகளுக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, அரசாணையில் சில திருத்தங்கள் செய்து, வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாணையின்படி, முதல் வகுப்பில் பள்ளியில் சேராமல், கல்வி உரிமைச் சட்டம் வயதின் அடிப்படையில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை, நேரடியாக பள்ளியில் சேர்ந்து, தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து, பின் தமிழகத்தில் தொடர்ந்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், பணி முன்னுரிமைக்குத் தகுதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் சான்று அளித்தால் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில வழிகாட்டி நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

