புதுவைத் தேர்தல் களம்: நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய்

புதுவைத் தேர்தல் களம்: நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய்

2 mins read
012b6081-cd1f-4ff8-9d57-6388a18acc22
புதுவையில் தவெக தலைவர் விஜய் விரைவில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். - கோப்புப்படம்: தினமணி

புதுவை: புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நள்ளிரவு வெளியிட்டார்.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 9.48 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் புதுவையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதியன்று, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்முறை 5.03 லட்சம் பெண்களும் 4.45 லட்சம் ஆண்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இருமுனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் தலைமையிலான தவெகவும் மூன்றாவது அணியாகக் களமிறங்கியுள்ளது.

முன்னதாக, தவெகவும் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. பல தரப்பினருடன் கூட்டணி குறித்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தமிழகத்தைப் போலவே புதுவையிலும் தவெக தனித்துக் களம்காண்கிறது.

இதற்கிடையே, என்ஆர் காங்கிரஸ், பாஜக அணியிலும், திமுக, காங்கிரஸ் இடையேயான அணியிலும் தொகுதிப் பங்கீடு சிக்கல் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு, எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகிவிட்டாலும் எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதில் இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், பல தொகுதிகளில் இரண்டு கூட்டணிகளையும் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 26ஆம் தேதிதான் கடைசி நாளாகும். அதற்குள் யாருக்கு எந்த தொகுதி என்பது முடிவாகிவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவர் எனக் கூறப்படுகிறது.

புதுவையில் தவெக தலைவர் விஜய் விரைவில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்