சென்னை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய தமிழக கனிம வளத்துறை ஆணையரின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் காட்டத்துடன் விமர்சித்துள்ளது.
கோவையில் நடந்த குவாரி மோசடியில், கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரையிலான தொடர்பு குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த செந்தாமரை என்பவரின் கல் குவாரிகளில் விதிமீறல் நடப்பதாகக் கூறி, ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கூட்டுக்குழு சம்பந்தப்பட்ட குவாரிகளை ஆய்வு செய்த பின்னர், பெரிதாக ஏதும் விதிமீறல் நடக்கவில்லை என ஆய்வறிக்கை அளித்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி துணை ஆட்சியர் செந்தாமரை மீதான புகாரின் பேரில் அவருக்கு ரூ.32 கோடி அபராதம் விதித்தார். செந்தாமரை தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அபராத உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே, செந்தாமரையின் மேல்முறையீட்டை விசாரித்த கனிம வளத்துறை ஆணையர் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரூ.2.48 கோடியாக குறைத்தார்.
இதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் தரப்பு உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுகியது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தாமரை சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்திருப்பது உறுதியானதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர். கனிம வளத்துறை ஆணையரின் உத்தரவு, மனசாட்சி உள்ள ஒருவரால் புரிந்துகொள்ளவும் கற்பனை செய்யவும் முடியாத அளவில் உள்ளது.
“அவரது உத்தரவு மக்களையும் அரசையும் ஏமாற்றும் விதமாகவும் மோசடியாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, உயர் நீதிமன்ற பொது நல வழக்கு விசாரணையின்போது, குவாரியை மூடி விட்டதாக, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரியை செயல்பட அனுமதித்து உள்ளனர்.
“குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, கனிம வளத்துறை குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி மேலும் தெரிவித்தார்.