கரூர்: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் ஏறக்குறைய 15 நிமிடங்கள் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இருவரும் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக மட்டுமே பேசினார்களா அல்லது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனரா என்பது தெரியவில்லை.
கரூரில் நடைபெற்ற விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே, காவல்துறை சார்பில் கரூர் மாவட்ட கூடுதல் இணை காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்த் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் திங்கட்கிழமை சம்பவம் நிகழ்ந்த வேலுச்சாமிபுரத்தைப் பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திங்கட்கிழமை அன்று, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு நடைபெற்றது.
இதனிடையே, கூட்ட நெரிசல் ஏற்பட கரூர் காவல்துறைதான் காரணம் என தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
“பெருங்கூட்டம் கூடிய நிலையில், திடீரென இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விஜய் பிரசாரம் மேற்கொண்ட பகுதிக்கு வந்தது ஏன்? அங்கு எவ்வாறு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது? விஜய் மீது காலணியை வீசியது யார்?” என்று தவெக தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தவெக நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஓர் உறவாய் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.
“தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வழி தவெக தலைவர் விஜய்யுடன் பேசியதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் சம்பவம் குறித்து அவர் தகவல்களைக் கேட்டறிந்ததாகவும் பின்னர் உயிரிழந்த தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுபோன்ற தருணங்களில் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் மீண்டும் முழு வீச்சுடன் களத்துக்குத் திரும்ப வேண்டும் என்றும் ராகுல் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தை அடுத்து, சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், விஜய் வீடு மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள இலங்கை, பிரிட்டன் தூதரகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தீவிர சோதனைக்குப் பிறகு இம்மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.