சென்னை: திமுக, அதிமுக கூட்டணிகள் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வியாழக்கிழமை (மார்ச் 5) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை கடைசி நாள்.
திமுக சார்பில் இம்முறை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், திமுக மாநிலக் குழுத் தலைவராக உள்ள திருச்சி சிவா, கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் (54 வயது) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளராக பொறுப்பில் உள்ளார்.
அதேபோல, அதிமுகவில் ஒரு இடத்தில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்புமணியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் 34 எம் எல்.ஏக்கள் வாக்களித்தால் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியும். இதனால் அனைவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் இருந்து அவரது உதவியாளரான சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பே அதிகம் என்றாலும் கடைசி நேர பரபரப்பாக அன்புமணிக்கு ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

