சென்னை: திமுக, அதிமுக கூட்டணிகள் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வியாழக்கிழமை (மார்ச் 5) தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய வியாழக்கிழமை கடைசி நாள்.
முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது என திமுக, அதிமுக தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக சார்பில் இம்முறை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், திமுக மாநிலக் குழுத் தலைவராக உள்ள திருச்சி சிவா, கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சுதீஷ் வேட்பாளராகக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் (54 வயது) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளராக பொறுப்பில் உள்ளார். அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனிடையே மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்கள் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்படுவதாக இருந்தது. அதன்படி மூத்த தலைவர் தம்பிதுரையை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார்.
மற்றொரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அறிவித்த நிலையில், அந்த இடத்தில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

