தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழர்களுக்கு எதிரான விதிகள் திரும்பப்பெறப்பட வேண்டும்: ராமதாஸ்

1 mins read
1ce5abaf-3081-45df-b7f0-65481248f89d
பாமக நிறுவனர் ராமதாஸ். - படம்: இணையம்

சென்னை: வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்ற தமிழர்களுக்கு எதிரான விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், பண்பாட்டு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பண்பாட்டு உறவுகளுக்கான குழு வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், கல்வியியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இந்தி, சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை என்று அவர் கூறினார்.

தமிழாசிரியர்களுக்கு பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத்தான் தமிழ், ஆங்கிலத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி வழியாக எவருக்கும் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கலாம். தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அதற்குச் சற்றும் தொடர்பில்லாத இந்தி, சமஸ்கிருத மொழியறிவு ஏன் தேவை என்பது புரியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஆகும். இதை அனுமதிக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்