நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் சந்திக்கத் தயார்: செங்கோட்டையன்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் சந்திக்கத் தயார்: செங்கோட்டையன்

படம்: தந்தி டிவி

12 Nov 2026 - 7:13 pm

2 mins read

கோபிசெட்டிபாளையம்: அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நினைத்தால், அதனையும் எதிர்கொள்ளத் தவெக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை (நவம்பர் 12) தெரிவித்துள்ளார்.

பொதுவாக இதுவரைக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஊடகங்கள்தான் அப்படிச் சொல்கின்றன என்று ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

எம்ஏல்ஏக்களிடம் கையெழுத்து

ஆட்சி அமைத்து ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகளின் குதிரைபேர முயற்சிகளும், சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற சவால்களும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. சில எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சிகளுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாகவும், கமிஷன் பெறுவதாகவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இச்சூழலில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் புதன்கிழமை மாமல்லபுரம் சொகுசு விடுதியில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்எல்ஏக்களிடம் வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் ஸ்ரீநாத், எம்எல்ஏக்கள் முஸ்தபா, வி.எஸ்.பாபு ஆகிய நால்வரும் கலந்துகொள்ளவில்லை

கருப்புப் பட்டியலில் உள்ள 30 எம்எல்ஏக்களைத் தனித்தனியாக அழைத்து விஜய் பேசியுள்ளார். திமுக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், இதுபோன்று இனியும் நடந்துகொண்டால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“ஆட்சி மாறும்போது தொகுதித் திட்டங்கள் குறித்து எம்எல்ஏக்களை அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்றுதான். நேற்றைய ஆலோசனையில் யாரிடமும் எந்தக் கடிதமும் வாங்கப்படவில்லை,” என்றார் அவர்.

காவல்துறையுடன் விஜய் ஆலோசனை

இதற்கிடையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்துத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் வியாழக்கிழமையும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்க் ஆகியோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்