புகழ்பெற்ற எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்

புகழ்பெற்ற எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்

1 of 2
படம்: தமிழ் விக்கி
படம்: தமிழ் விக்கி

03 Nov 2026 - 5:58 pm

2 mins read

தமிழ் இலக்கிய உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தனித்துவமான எழுத்து நடையாலும் கதை சொல்லும் உத்திகளாலும் தனி முத்திரை பதித்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) காலமானார். அவருக்கு வயது 74.

1977ஆம் ஆண்டு ‘கணையாழி’ இதழில் கவிஞராக எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கிய இவர், நாவல், சிறுகதை, கட்டுரை, மேடை நாடகம், திரைப்பட வசனம் எனப் பல துறைகளில் தடம் பதித்தவர்.

மாந்திரீக யதார்த்தவாதக் கதையாடலைக் கொண்ட ‘அரசூர் வம்சம்’, ‘விஸ்வரூபம்’, ‘அச்சுதம் கேசவம்’, ‘வாழ்ந்து போதீரே’ ஆகிய இவரது நான்கு நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. வரலாற்றுப் பின்னணியில் இவர் எழுதிய ‘மிளகு’ நாவலும், மென்பொருள் துறை சார்ந்த ‘மூன்று விரல்’ நாவலும் பரவலான கவனத்தை ஈர்த்தவை. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா-2’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இவர் வசனமும் எழுதியுள்ளார்.

மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவைப் போலவே தொழில்நுட்பப் பின்னணியும், எழுத்தில் நவீனமும் நையாண்டியும் இழைந்தோடும் நடையும் கொண்டிருந்ததால், வாசகர்கள் இவரைச் செல்லமாகச் ‘சின்ன வாத்தியார்’ என்று அழைப்பதுண்டு.

‘ராயர் காபி கிளப்’ எனும் இணையக் குழுமம் வழியே இளம் தலைமுறைப் படைப்பாளிகளை இலக்கியத்திற்கு ஈர்த்ததிலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

இவரது ‘அரசூர் வம்சம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி கோஸ்ட்ஸ் ஆஃப் அரசூர்’, கிராஸ்வேர்ட் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.

கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, 2024ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது, இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை இவர் பெற்றுள்ளார். மலையாளம், மராட்டிய மொழிகளிலிருந்து சிறந்த ஆக்கங்களைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது மறைவுக்குப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் பிரபலமான தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்