பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லியில் உள்ள பழமையான திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட ரூ.10 கோடி மதிப்பிலான 10,000 சதுர அடி ஆக்கிரமிப்பு நிலம் வியாழக்கிழமை (நவம்பர் 11) மீட்கப்பட்டது.
பூந்தமல்லி குளக்கரைத் தெருவில் உள்ள அந்நிலத்தைத் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், மாட்டுக் கொட்டகைகளைக் கட்டியிருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தைக் காலி செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டும் அவர்கள் வெளியேறவில்லை.
அதையடுத்து, கோவில் உதவி ஆணையர் சிவஞானம், தனி வட்டாட்சியர் பாலாஜி, பூந்தமல்லி வட்டாட்சியர் நடராஜன் முன்னிலையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன. 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 17,707.10 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 13,233 எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 78ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 23,815 வழக்குகளில் 9,125 வழக்குகளுக்கு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலுவைத் தொகையாக ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 241 கோவில்களின் பெயரில் ஏறக்குறைய 296.82 ஏக்கர் நிலங்களுக்குப் பட்டா பெறப்பட்டுள்ளதுடன், வாடகைதாரர்களுக்குக் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் நிலுவைத் தொகை விவரங்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
