சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஸ்.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்ததாக அவர் மீது சில தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து நூறு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூலித்ததாகவும் இந்த முறைகேட்டில் திரு அன்பில் மகேசுக்குத் தொடர்பு உள்ளது என்றும் காவல்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக்கூறி, சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேசுக்குச் சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அன்பில் மகேஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் எனத் தகவல் பரவியது.
இதையடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்ப தமக்கு முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அன்பில் மகேஸ்.
மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், அதைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை அடுத்து, அன்பில் மகேஸ் திங்கட்கிழமை (அக்டோபர் 26) மாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இதனால் திமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
