பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க ரூ.50,000 கோடி சதி: அன்புமணி ராமதாஸ்

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க ரூ.50,000 கோடி சதி: அன்புமணி ராமதாஸ்

படம்: இந்து தமிழ்த் திசை

06 Nov 2026 - 3:41 pm

2 mins read

சென்னை: சென்னையின் முக்கிய இயற்கை வடிகாலாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து அழிக்க ரூ.50,000 கோடி மதிப்பிலான பெருஞ்சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சதுப்புநிலத்தை ஆக்கிரமிக்கும் தனியார் நிறுவனங்களுக்குச் சில அரசு அதிகாரிகள் துணை நிற்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களை வழங்கி திசைதிருப்பச் சதி நடப்பதாகவும் பனையூர் பாமக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

சதுப்புநிலப் பரப்பை முறையாக வரையறுக்கக் கோரி 200 வகையான வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், தனியார் கட்டுமான நிறுவனங்களைக் காக்கும் நோக்கில் முக்கிய அதிகாரி ஒருவர் அவற்றை நிராகரித்து மோசடியில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்திய தமிழக முதலமைச்சர் விஜய், பள்ளிக்கரணை சதுப்புநிலம் அழிந்தால் சென்னையே மூழ்கிப் போகும் ஆபத்து இருப்பதை உணர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். இப்பிரச்சினையில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை முடக்காவிட்டால், ரூ.50,000 கோடி ஊழல் என்ற பழிச்சொல் அரசு மீது பாயும் என்றும் எச்சரித்தார்.

முந்தைய ஆட்சியில் உலக வங்கியின் ரூ.21.6 கோடி கடனுதவியுடன் இப்பகுதியில் அமைக்கப்பட்ட 10 அடி உயரச் சாலை, நடைபாதை திட்டமிட்ட சூழ்ச்சி என்று கூறிய அவர், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத இடத்தில் வெள்ள வடிநீரைத் தடுக்கும் வகையில் இச்சாலை அமைக்கப்பட்டிருப்பதாகச் சாடினார்.

தனியார் கட்டுமானங்களுக்கு வழிவகுத்த அதிகாரிகளை உடனடியாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து ஆக்கிரமிப்புகளால் 1,725 ஏக்கராகச் சுருங்கியுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க வேண்டும். பறவைகள் வாழிடமான இதன் எல்லைகளை 2017 விதிகளின்படி வரையறுத்து, சென்னை இரண்டாவது பெருந்திட்டத்தில் இணைக்க வேண்டும். இதன்மூலம் புதிய கட்டுமானங்களைத் தடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தின் 26,883 சதுப்புநில எல்லைகளையும் முறைப்படி அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்