சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கிற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் நியமனத்தில் ஏறக்குறைய ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சின்னத்திரை நடிகைகளின் பெயர்களும் அடிபடுவதாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.
இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளியும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார் ஜனனி அசோக் குமார்.
அதில், கடந்த இரண்டு நாள்களாக சமூக ஊடகங்களில் ரூ.634 கோடி ஊழலுடன் தன் பெயரைத் தொடர்புபடுத்தி வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எந்தவிதமான அரசியல் பின்னணியோ அல்லது எந்த அரசியல் தலைவருடனும் தொடர்போ அல்லது பழக்கமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“காவல்துறை விசாரணைக்கு அழைப்பதாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதிவிட முடியாது. ஊடகங்களும் சமூக ஊடகப் பயனர்களும் உண்மைத்தன்மை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்,” என ஜனனி அசோக் குமார் கூறியுள்ளார்.
