சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கனமழையால் தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படுமெனவும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கணக்கெடுப்புக்குப் பின்னர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “டிட்வா புயல் காரணமாகப் பெய்த கனமழையால் இதுவரை நால்வர் உயிரிழந்தனர். 582 கால்நடைகள் மாண்டன. 1,601 குடிசை வீடுகள் சேதமடைந்தன,” என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

