மணல் குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

மணல் குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

1 of 2
கோப்புப் படம்: தினமலர்
கோப்புப் படம்: புதிய தலைமுறை

07 Nov 2026 - 1:43 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் திமுக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகள் உட்பட 27 பேர் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த புகார்கள், அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 28 மணல் குவாரிகள் தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், நான்கு குவாரிகளிலேயே பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திறந்தவெளி ஒப்பந்த முறைக்குப் பதிலாக, விதிகளை மீறி வரையறுக்கப்பட்ட ஒப்பந்த முறையில் ஒப்பந்தப் பணிகளை வழங்கியது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாகச் சட்டவிரோதமாக மணல் அள்ளியது, போலி அனுமதிச் சீட்டுகள் தயாரித்து மணல் கடத்தலுக்குத் துணை நின்றது எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வழக்கில் நீர்வளத்துறையின் ஓய்வுபெற்ற முதன்மை தலைமைப் பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி, 14 அரசு ஊழியர்கள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்குப் பதிவைத் தொடர்ந்து, சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, புதுவை உள்ளிட்ட 34 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதில் வழக்கு தொடர்பான 825 முக்கிய ஆவணங்கள், 11 மின்னணுச் சாதனங்கள், மூன்று வங்கிப் பாதுகாப்புப் பெட்டகச் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
துரைமுருகன்திமுகஅமைச்சர்மணல்முறைகேடுஊழல்