சசிகலாவுக்குப் புதிய சிக்கல்

சசிகலாவுக்குப் புதிய சிக்கல்

கோப்புப் படம்: தினமணி

28 Oct 2026 - 7:05 pm

1 mins read

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அஇபுதமமுக) இருந்து அதன் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சக்கரவர்த்தி, கடந்த 2026ஆம் ஆண்டு கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா, தேர்தல் முடிவடைந்த பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டார்.

சசிகலாவைத் தொடர்புகொண்டு பேசுவதற்கோ அல்லது நேரில் சந்திப்பதற்கோ பலமுறை முயற்சி செய்தும் முடியாமல் போனது என்றும் கட்சிப் பணிகளை முடக்கும் வகையில் செயல்பட்டதன் காரணமாகவே அவர் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் திரு சக்கரவர்த்தி தெரிவித்தார்.

இந்த நீக்க நடவடிக்கை தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதல் பெறப்படும் என்றும் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.

மேலும், கட்சியின் அன்றாடச் செயல்பாடுகளையும் வளர்ச்சிப் பணிகளையும் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகப் புதிய பொதுச்செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்