நாமக்கல்: தமிழகத்தில் சிறுநீரக விற்பனை மோசடி தலைதூக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழை விசைத்தறித் தொழிலாளர்களைக் குறிவைத்து இந்த மோசடியில் பலர் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, மூன்று லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, சிறுநீரகத்தை வாங்கும் முகவர்கள் அதை கள்ளச்சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையடுத்து, சிறுநீரக விற்பனை புகார் தொடர்பாக பள்ளிபாளையத்தில் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன்,
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் சிறுநீரகம் விற்பனை செய்யும் முகவராகச் செயல்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது ஆனந்தன் இல்லை என்றும் அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்ததாகக் கூறினார்.
அவர் பிடிபட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதனிடையே, சிறுநீரகங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
“தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும் அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
“நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும் ஒப்புக்கொள்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
“கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும் அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களுக்குப் பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன,” என்று அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக வணிக நோக்கில் உடல் உறுப்பு தானம் செய்வோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
“உடல் உறுப்பு தானம் மிகப்பெரிய மனிதநேய நடவடிக்கை. அதனை விற்பனையாகவோ, வியாபாரமாகவோ ஆக்குவது மிகப்பெரிய குற்றம்.
“உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்குப் பின்னர் நிறையப் பேர் தானம் செய்கின்றனர்.
குற்றவாளிகள் தப்ப முடியாது,” என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.